வந்தார் – வாக்களித்தார்- – சென்றார்: அன்புமணியை சாடிய கனிமொழி!

அன்புமணி ராமதாசை மாநிலங்களவையில் யாரும் பார்த்ததே கிடையாது. ஆனால் அன்று ஒருநாள் வந்தார். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். சென்றுவிட்டார் என்று  திமுக எம்பி  கனிமொழி கூறியள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு பேசிய கனிமொழி, பாஜக ஆட்சியில் சட்டங்கள் எவ்வாறு இயற்றப்படுகின்றன என்று விளக்கினார்.

இவ்வளவு போராட்டம் அவசியம் இல்லை. அஸ்ஸாம் பற்றி எரிய வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து போராடுகின்றனர்.

வங்கத்தில் இந்த சட்டத்தை நுழையவிட மாட்டோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்து இருக்கிறார். நாமும் இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் தெரியாத்தனமாக ஓட்டுப் போட்டு மாநிலங்களவைக்கு அனுப்பிய அதிமுக உறுப்பினர்கள் நினைத்து இருந்தால், இந்த சட்ட திருத்த மசோதாவை தோற்கடித்து இருக்க முடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் ஆதரித்து வாக்களித்தார்கள்.

அன்புமணி ராமதாசை மாநிலங்களவையில் யாரும் பார்த்ததே கிடையாது. ஆனால், அன்று வாக்களிப்பதற்காக வந்து, தனது ஒரே ஒரு வாக்கை, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக போட்டுவிட்டு போய் இருக்கிறார்.

இது இலங்கை தமிழர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் நிற்கவேண்டும் என்று கருதும் தமிழர்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா? இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.