குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மம்மூட்டி, துல்கர் சல்மான் முகநூலில்  பதிவு!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் ஆளும் இடதுசாரிகள், எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை இணைந்து போராடி வருகின்றன.

இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மம்மூட்டி, தனது முகநூல் பக்கத்தில் குடியுரிமைச் சட்டத்தைக் குறிப்பிடாமல் ஆனால், மறைமுகமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அதில், சாதி, மதம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்தையும் கடந்து நாம் உயரும்போதுதான் வலிமையான தேசமாக மாற்ற முடியும். ஒற்றுமையின் உத்வேகத்துக்கு எதிராக ஏதாவது இருந்தால், அது நம்பிக்கை இழக்கச் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் முகநூலில் பதிவிட்ட கருத்தில்,  மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவை நமது பிறப்புரிமை. அதை அழிக்க எது வந்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

எவ்வாறாகினும், அகிம்சை, வன்முறையில் ஈடுபடாமல் இருத்தல்தான் நமது பாரம்பரியம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அமைதியான வழியில் போராடுங்கள், சிறந்த இந்தியாவுக்காகத் துணை நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும்,  ஹேஷ்டேகுகளாக லாங்லிவ் செக்குலரிஸம், யுனைடெட் வீ ஸ்டாண்ட் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.

மலையாள நடிகர்களான பிரித்விராஜ், பார்வதி, டோவினோ, அமலாபால் ஆகியோர் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு தங்களின் எதிர்ப்பை முகநூலில் பதிவு செய்துள்ளனர்.