பாஜக எம்.எல்.ஏ மீதான பாலியல் பலாத்கார வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

உத்திரபிரதேச மாநிலம், பங்கர்மா தொகுதியில், பாஜக சார்பில்  நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல்தீப்சிங் செங்கார்.

இவர், தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, உன்னாவ் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 2017-ம் ஆண்டு குற்றம் சாட்டினார்.

அதையடுத்து, செங்கார் மற்றும் அவரது நண்பர் சாஷி சிங் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இருந்து, செங்கார் நீக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு, லக்னோ நீதிமன்றத்தில் இருந்து, டெல்லி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

வழக்கில், வாதங்கள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

இதனிடையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், கடந்த ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வழக்கிலும் செங்கார் குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கு விசாரணையும் தனியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில், உன்னாவ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பாஜக எம்.எல்.ஏ மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.