உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தது: மனுக்கள் இன்று பரிசீலனை!

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்,  314  ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்,  9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள்,  76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. கடந்த 6 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று  கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் தாக்கல் செய்தனர். இதனால் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற 19-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.