ஆதார் அட்டையுடன் பான் கார்டு எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் – வருமான வரித்துறை அறிவிப்பு!

ஆதார் அட்டையுடன் பாண் கார்டு நம்பரை இணைக்க வரும் 31-ந் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

வங்கிக்கணக்கு தொடங்குவது தொடங்கி எல்லா அரசு திட்டங்களிலும், மானியங்களை பெறுவதற்கும் ஆதார் அட்டையே முக்கிய  ஆவணமாக திகழ்கிறது.

இந்த ஆதார் எண்ணை வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறுகிறது.

மேலும், வருமான வரிச்சட்டத்தின்படி, பான் எண் பெற்றிருப்பவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வருமான வரித்துறையிடம் தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என்றும் வருமான வரித்துறை  அறிவித்துள்ளது.