தமிழகத் தேர்தல் ஆணையர் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மதிக்காமல் தன்னிச்சையாக தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்தியதாக தமிழகத் தேர்தல் ஆணையர் மீது உச்ச நீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு, உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக நடைபெற்றது.  இறுதியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழகத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என திமுக மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது.

அப்போது உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்துவதாக கூறப்பட்டிருப்பதை திமுக சுட்டிக்காட்டி மீண்டும் முறையீடு செய்தது.

ஆனால் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்தத் தடையில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை என மீண்டும் திமுக நீதிமன்றம் சென்றபோது உச்ச நீதிமன்றம் முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனக் கூறி தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது, நீதிமன்ற அவதூறு வழக்கை திமுக தொடுத்துள்ளது.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தாக்கல் செய்த மனுவில், ”உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு பிரதான விஷயங்களைச் சுட்டிக்காட்டியும் அதைக் கடைப்பிடிக்காமல் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி, வார்டு மறுவரையறை செய்த பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு வெளியிட்ட தனது அறிவிக்கைப்படி செயல்படுகிறது.

1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையிலும், 1996-ம் ஆண்டு மறுவரையறை அடிப்படையில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்ட அடிப்படையிலும் தேர்தல் நடத்துவதாக தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு மாறானது. ஆகவே தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவதூறு தொடரப்பட்டுள்ளது.

அதேபோன்று தள்ளி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 3 மாதத்திற்குள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டு மறுவரையறையும், இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்திய பின் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறெனில் அது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் அதைச் செயல்படுத்தவில்லை. ஆகவே மொத்தமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் மொத்தமாக முடித்து தேர்தலை நடத்த உத்தரவிடவேண்டும்’’ என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.