அரசியல் வேண்டாம் என்ற  அமிதாப் அறிவுரையை கடைபிடிக்க முடியவில்லை: ரஜினி பேச்சு!

அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறிய அறிவுரையை கடைபிடிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின்  167-வது படமாக உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று  நடைபெற்றது.

இதில், நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ்,  சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 60  வயதில் மூன்று முக்கிய விஷயங்களை கடை பிடிக்க வேண்டும் என நடிகர் அமிதாப் பச்சன் தமக்கு கூறிய அறிவுரைகளை குறிப்பிட்டார்.

எப்போதும் சுறுசுறுப்புடன் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது ஆகியவை அந்த அறிவுரைகள்.

அதில், முதல் இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது. மூன்றாவது விஷயத்தை என்னால் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

இதனிடையே, சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2021 ஆம் ஆண்டில் கூட நடிகர் ரஜினிகாந்த்  கட்சி தொடங்குவது சந்தேகம்  என்று கூறினார்.