குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் வலுக்கும்  போராட்டம்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதலில் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம், தற்போது  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வருகிறது.

தலைநகர் டெல்லியில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.

இதில் காவல் துறையை சாராத சிலரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கண்டித்து, டெல்லியின் மற்ற பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்திர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், கொல்கத்தா, பஞ்சாப், பீகார், கேரளா போன்ற மாநிலங்களிலும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வசிக்கும் அசாம் மாநில இளைஞர்கள் ஒன்றிணைந்து வரும் 19 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக, பாஜக கூட்டணி கட்சியான அசாம் கனபரிஷத் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது,  நல்ல நிர்வாகத்தை கொடுப்பது அரசியலைமைப்பை காப்பது ஆகியவைதான் ஒரு அரசாங்கத்தின் பணியாகும். ஆனால்,  பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, இந்தியா கேட் முன்பு  நேற்று  திடீரென்று பிரியங்கா காந்தி இரண்டு மணி நேரம் தரையில் அமர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? என்பதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், யாருடைய அரசாங்கம் மாணவர்களை தாக்கியது? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் நேற்று பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் ஜெக்தீப் தங்கர்,

அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. அதனால், மம்தா பானர்ஜி, தம்மை நேரில் வந்து சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.