நான் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி: காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த சிவசேனா!

மன்னிப்பு கேட்பதற்கு என்னுடைய பெயர் ராகுல் சாவர்கர் அல்ல என்று பேசிய ராகுல் காந்திக்கு, தேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர், அதில் சமரசத்துக்கு இடமில்லை என்று சிவசேனா பதில் அளித்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி மேக் இன் இந்தியா, ரேப் இன் இந்தியா என மாறியுள்ளது என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாஜக பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஆனால், ராகுல் காந்தி மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில், தேசத்தை காப்போம் என்ற பெயரில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள், மோடி அரசு பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டது, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தச் செயல்பட்டு வருகிறது என்று கண்டித்தனர்.

ராகுல் காந்தி பேசும்போது, என்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல,  ராகுல் காந்தி” என்று பேசி இருந்தார்

இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக,  முஸ்லிம்கள் ஆதரவைப் பெறுவதற்காகப் பேசிவரும் ராகுல் காந்திக்கு ராகுல் ஜின்னா என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தது.

இதனிடையே மகாராஷ்டிராவில் காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும்,  எம்.பியுமான சஞ்சய் ராவத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ” வீர சாவர்க்கர் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் உயரிய பிம்பம்.

சாவர்க்கர் என்ற வார்த்தை நாட்டின் கவுரவத்தையும், சுயமரியாதையையும் குறிக்கும். நேரு,  காந்தியைப் போல சாவர்க்கரும் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளார்.

ஒவ்வொரு உயரிய பிம்பம் கொண்டவர்களும் மதிக்கப்பட வேண்டும். இதில் எந்தவிதத்திலும் சமரசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்

காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா கட்சி ஏற்கனவே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்குக் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிருப்தி கிளம்பியது.

அதனால், மாநிலங்களவையில் அந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்தது.

இந்த சூழலில் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு நேரடியாக பதில் அளிக்காமல் மறைமுகமாக ராகுல் காந்திக்கு தங்கள் நிலைப்பாட்டை சிவசேனா தெரிவித்துள்ளது.