தேர்தல் வியூக டீமை பிரித்து மேய்ந்த அதிமுக-திமுக: கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்த பிரசாந்த் கிஷோர்!

தேர்தலில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் அந்தந்த கட்சி தலைவர்களின் ஆளுமைத்திறன் மற்றும் தனிப்பட்ட மக்கள் செல்வாக்காகவே கருதப்படும்.

வட இந்திய மாநிலங்களில், கார்பரேட் ஸ்டைல் தேர்தல் பிரச்சார வியூகங்களுக்கு, அந்த தலைவர்கள் ஒப்புதல் அளித்தாலும், தமிழகத்தில் அதை ஒரு பலவீனமாக கருதும் போக்கே இன்று வரை நீடிக்கிறது.

ஒரு வேளை, தேர்தல் வியூகத்திற்காக ஒரு தனிப்பட்ட டீமை களமிறக்கினாலும், அது வெளிப்படையாக இயங்க அனுமதிப்பது இல்லை.

திமுகவுக்கு கடந்த காலங்களில், சுனில் என்பவர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தாலும், அவர் திரை மறைவில் இருந்தே இயங்கினார்.

ஆனால், பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை, திரை மறைவில் இயங்க அவர் ஒத்துக்கொள்வதில்லை. அதனால், பிரசாந்த் கிஷோருடனான திமுகவின்  தேர்தல் ஒப்பந்தம் தள்ளிப்போவதாக ஒரு தகவல் உலவுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை தன் பக்கத்தை விட்டு விலகாமல், சுயமாகவே வியூகம் அமைத்து, அதை இறுதி வரை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர்.

இந்நிலையில், திமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைக்க ஒரு ஏஜென்சியை ஒப்பந்தம் செய்தால், கலைஞர் அளவுக்கு ஸ்டாலினுக்கு ஆளுமை திறன் இல்லையா? என்ற ஒரு கேள்வி தமிழக அரசியலில் உருவாகும்.

பிரசாந்த் கிஷோருடனான தேர்தல் வியூக ஒப்பந்தம் தள்ளிப் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

2012  ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில், நரேந்திர மோடிக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். அடுத்து,  2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் மோடி பிரதமர் ஆவதற்காக அவரே பணியாற்றினார்.

ஆனால், அதன்பிறகு, பிரசாந்தை கழட்டி விட்டது பாஜக. பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் அவர் வியூகம் வகுத்து கொடுத்தார்.

அதன் பின்னர், பீகாரில் நிதிஷ் குமார், ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டி போன்றவர்களுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த தேர்தலில் திமுகவுக்கு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கணக்கு போட்ட அவர், திமுகவை நாடினார்.

அதற்காக திமுகவில் இருந்து சுனிலும் வெளியேறினார். ஆனாலும், பிரசாத் கிஷோர் நேரடியாக, திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதை தலைமை விரும்பவில்லை.

அதன் காரணமாகவே, அவருடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், விரைவில் தேர்தல் வரப்போகும் டெல்லிக்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக, கிஷோரை ஒப்பந்தம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இதனிடையே, கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களில் சிலரை அதிமுகவும், சிலரை திமுகவும் வளைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஊழியர்களை பின்னணியில் வைத்துக்கொண்டு, தமக்கான தேர்தல் வியூகத்தை, தாமே வகுக்கலாம் என்று இவ்விரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

திமுக-அதிமுகவின் ஊழியர் இழுப்பு வியூகம், பிரசாந்த் கிஷோரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில்தான், பிரசாந்த் டெல்லிக்கு சென்று அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், 2021 ம் ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால், ஒரே நபர் இரு கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பதும் செயல்படுத்துவதும் கடினம்.

அதனால், பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்துகொள்ளுமா? அல்லது தவிர்க்குமா? என்பதை இப்போதைக்கு உறுதியாக கூறமுடியாது என்றே சொல்லப்படுகிறது.