குடியுரிமைத் திருத்த சட்டம்: ஆதரவும் – எதிர்ப்பும் ஏன்?

பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலகளவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மதச்சார்ப்பின்மை நாடாக அறியப்படும் இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிளவுப்படுத்த வேண்டாம் என குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் தீவிர நிலையை அடைந்துள்ளது.

இதன் காரணமாக வடகிழக்கு மா நிலங்களுக்கு டிசம்பர் 15 மற்றும் 16 பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.

மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமனும் இந்தியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

அத்துடன் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் தங்கள் நாட்டு மக்களை அம்மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 9ம் தேதியன்று லோக் சபாவிலும் டிசம்பர் 11ம் தேதியன்று ராஜ்ய சபாவிலும் கடும் விவாதகள் மற்றும் எதிர்ப்புகள் இடையே நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாக மாறியிருக்கிறது.

இந்தச் சூழலில் குடியுரிமைத் திருத்த சட்டத்தில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் முழுமையான வடிவத்தை அறிவது அவசியமாகிறது.

# இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், இதற்கு முன்பு  ம இந்திய குடிமக்களாக கருதப்படமாட்டர்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவும், சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

#ஆனால் குடியுரிமைத் திருத்த சட்டம்,  விரோதமாக இந்தியாவில் குடியேறிவர்களுக்கும் இந்திய குடிமக்களாகும் அங்கீகாரத்தை வழங்குகிறது.

அதன்படி 1955 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1955 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தின்படி,  இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த மக்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பின் அவர்கள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். இதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

# திருத்தப்பட்ட சட்டம் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துகள், புத்தர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சி இனத்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பினும் இந்தியாவில் 6 ஆண்டுகள் தங்கி இருந்தாலே அவர்களுக்கு இந்திய மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.

# மேலும் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய பிற நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் திருத்தப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

#  அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்தப் பகுதிகளில் உட்கோட்டு அனுமதி பெற்றுச் செல்லும் பகுதியாகவே செயல்படும்.

குடியுரிமைத் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் பின்வருமாறு:-

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரலாற்று ரீதியிலான உண்மை.

1947 ஆம் ஆண்டு பிரிவினைவியின்போது லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் குடிபெயர்ந்தார்கள்.

ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் அரசியலைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சலுகையை வழங்குகிறது. இதன் காரணமாக அந்நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துகள், சீக்கியர்கள், புத்தர்கள், கிறித்துவர்கள், பார்சி மற்றும் ஜைன மதத்தினர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இது அவர்களின் தினசரி வாழ்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அவர்கள் அந்நாடுகளில் தங்கள் மதத்தை வெளிப்படையாக கூறுவதற்கும், பின்பற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சிறுபான்மையினர் சதவீதம் குறைந்து வருகிறது.

மேலும், அச்சுறுத்தல் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் இந்தியாவுக்கு அடைக்கலமாக வருகிறார்கள். மேலும் அவர்களது பயண காலம் காலாவதியான பின்னும் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.

இதன் காரணமாகவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கியுள்ள சிறுபான்மை மக்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பினும் அவர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு அங்கீகரிக்கிறது.

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு உத்தரவாதத்தையும், சட்டரீதியான பாதுகாப்பையும் இந்தத் திருத்தப்பட்ட சட்டம் பாதுகாக்க முயலும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கப்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:-

மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்திய அரசியலைப்பு சட்டத்தில் மத ரீதியாக பிளவை மத்திய அரசு ஏற்படுத்தி இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் என்று கூறப்படும் இச்சட்டத்தில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானின் முஸ்லிம் சிறுபான்மையின மக்களான அகமதியாக்களும், மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களும், இலங்கை தமிழர்களும் இதில் புறக்கணிக்க ப்பட்டுள்ளதாக காங்கிரஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், திமுக , திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திருத்தப்பட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக கருதப்படமாட்டார்களா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் பிற உரிமைகள் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர்.

அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வடகிழக்கு மக்களின் அரசியல், மொழி, கலாச்சாரம் மற்றும் நிலவுரிமையை பாதுகாக்க அரசியல் சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழங்கியுள்ள பாதுகாப்பு வலிமையுடன் தொடர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

எனினும் குடியுரிமைத் திருத்த சட்டம் மறுபரீசிலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என அழுத்தக் குரல்கள் மத்திய அரசை நெருக்கத் தொடங்கி உள்ளன