உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவின்  முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திமுக தரப்பில், கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் 9 மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு, 2011 மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்காமல் 1991 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம் என்று கூறப்பட்டது.

எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

எனினும் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து.

இதையடுத்து தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட ஊராட்சி வார்டு,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.