உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை!

உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்குகளை மையப்படுத்தி, உள்ளாட்சி தேர்தல் எப்படியாவது தள்ளிப்போகும் என்ற நிலையிலேயே இருந்து வந்தனர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்.

அதற்கேற்ப, திமுக வழக்கறிஞர்களின் கருத்தும், மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடினால், தேர்தல் தள்ளிப்போகும் என்ற வகையிலேயே இருந்தது.

அதனால், பெரும்பாலான மாவட்டங்களில், கூட்டணி கட்சிகள் உடனான, தொகுதி பங்கீட்டு பேச்சை தொடராமலே இருந்தனர் திமுகவின் பல மாவட்ட செயலாளர்கள்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அவசர, அவசரமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில், காங்கிரசுக்கு சாய்சே கொடுக்காமல், முக்கிய இடங்களை எல்லாம் திமுக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள இடங்களில் உங்களுக்கு எந்த இடம் வேண்டும் என்பதை டிக் செய்து கொடுங்கள் என்று காங்கிரசிடம் கூறப்பட்டு இருக்கிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள், கூட்டணியை இறுதி செய்யாமல், பாதியிலேயே எழுந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்தால், திமுகவிற்கு போட்டியிடவே இடம் இருக்காது என்று கூறுகின்றனர்.

இதன் காரணமாகவே பல மாவட்டங்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல், திமுக கூட்டணி திணறி வருவதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் நேரு, கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அம்மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கரன், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது, எந்தெந்த பகுதிகளில் வாக்கு வங்கி இருக்கிறது என்று இரு தரப்புக்குமே தெரியும். எனவே தேவை இல்லாமல் பட்டியலை கொடுத்து குழப்ப வேண்டாம் என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும், ஆளும் கட்சியை எதிர்த்து பணம் செலவு செய்ய இயலும் என்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும் என்று கூறி விட்டார்.

மற்றபடி, அனைத்து மாவட்டங்களிலுமே இந்த குளறுபடிகள் திமுக கூட்டணியில் நீடித்து கொண்டு இருப்பதாகவே கூறப்படுகிறது.

மறுபுறம் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள், இது குறித்து நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றனர்.