ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் -9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

முதல்வர் நியமனம் தவிர்த்து, பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனம் கூறுகிறது.

பாஜக உறுப்பினாராகவும், ஆர்எஸ்எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுனர், ஆர்எஸ்எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.

அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயல்பாடு நகைப்புகுரியதாக இருக்கிறது.

இவை அரசியல் சாசன முடக்கத்துக்கு சமமாகும் என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.