குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்த பாமக : கூட்டணி தர்மம் என ராமதாஸ் விளக்கம்!

பாஜக அரசு கொண்டுவந்த குரியிரிமை சட்டதிருத்த மசோதா, மக்களவையில் பெரும்பான்மை பலம் இருந்ததால் எளிதாக நிறைவேறியது.

ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இம்மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து இம்மசோதாவில் எதுவும் குறிப்பிடாத காரணத்தால், திமுக உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக, திமுக இளைஞர் மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

திமுக இளைஞரணி பொது செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர், இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பாமகவை பொறுத்தவரை, ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஒரு கட்சி.

ஆனால், அக்கட்சியின் ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், பாஜகவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

இது, பாமக இதுவரை கடைப்பிடித்து வரும் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மருத்துவர் ராமதாஸ், மசோதாவை கொண்டு வந்து விட்டதால், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் ஆதரித்துதான் ஆக வேண்டும் என்று கூறினார்.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நாங்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் கூறினார்.