கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு: குற்றவாளிகள் பற்றி  தகவல் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம்!

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால், தலா ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமாய் அறிவித்துள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். மதமாற்றம் செய்த சிலரை இவர் தட்டிக்கேட்டதால், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருவிடைமருதூர் காவைல் துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், இதுவரை 12 பேரைக் கைது செய்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர். அதில் இரண்டு பேர் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். தலைமறைவான மேலும் ஆறுபேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பற்றி தகவல் கொடுத்தால், தலா ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு, அவர்களின் படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதில் திருபுவனத்தைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா,  கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்,  பாபநாசத்தைச் சேர்ந்த புஹானுத்தீன், திருவிடை மருதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது, நஃபில் ஹாசன் ஆகிய 6 பேர் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.