ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: 750 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், 750 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரையிலான அவருடைய சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு வீடியோ கான்ப்ரன்ஸ் வசதியில் நேற்று  விசாரித்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில்,  குறிப்பிட்ட காலத்திற்குள் ராஜேந்திர பாலாஜியின் சொத்து மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவே அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதல் கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கை முடிக்க முடியுமா? அந்த அறிக்கை அடிப்படையில் ஏன் அடுத்தக்கட்ட விசாரணையை தொடரக்கூடாது? என்றனர்.

பின்னர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை தொடர்பான 750 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி .23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.