ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும்: தருமபுரி  திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை !

ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று, தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களவையில் எஸ். செந்தில்‌குமார்‌ பேசியதாவது:

எனது தொகுதியான தர்மபுரியில்‌ இயற்கை எழில்‌ கொஞ்சும்‌ ஒகேனக்கல்‌ நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது மிக மிக அழகான சுற்றுலாத்தலம்‌ மட்டுமல்லாது, வனப்பு மிகுந்த ரம்மியமான பகுதியும்‌ ஆகும்‌. ஆனாலும்‌, இது முறைசாரா வகையில்‌ இன்னும்‌ வரைப்படுத்தபடாத சுற்றுலா மையமாகவே உள்ளது.

இதை சர்வதேச தரத்தில்‌ அமைந்த சுற்றுலா தலமாக, மத்திய அரசு மாற்ற வேண்டும்‌. அதுமட்டுமல்லாது, அங்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும்‌ உருவாக்க வேண்டும்‌.

தற்போது  அங்கு பரிசல்‌ ஓட்டுனர்கள்‌,  மீன்‌ உணவு சமைப்பவர்கள், எண்ணெய்‌ மசாஜ்‌ செய்வோர்‌ என மூன்று வகையான தொழில்கள்தான் உள்ளன.

ஆனால்‌,  கர்நாடக அணைகளிலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு,  காவிரி ஆற்றில்‌ அதிகஅளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும்‌ மயங்களில்‌, இந்ததொழிலில்‌ ஈடுபடுவோர் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர்‌.

ஏறத்தாழ 4 முதல்‌ 6 மாதங்களுக்கு, இவர்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடுகள்‌ செய்து தரும்படி, நீண்டகாலமாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுற்றுலாவாசிகள்‌ இல்லாத காலங்களில்‌,  குறிப்பிட்ட சில பகுதிகளில்‌ மட்டுமாவது,  சில நிபந்தனைகளுடன்‌ கூடிய விதிமுறைகளுடன்‌, பரிசல்‌ ஓட்டுவதற்காவது அனுமதி தரும்படி கோரி வருகின்றனர்‌.

எனவே, இதற்கு தீர்வு காணும்‌ விதமாக மாவட்ட நிர்வாகத்துடன்‌ இணைந்து ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்ய வேண்டும்.

இதில், சுற்றுலாவாசிகள் இல்லாத காலங்களிலும்‌, அங்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்‌.

ஏற்கனவே அங்குள்ள வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதோடு, ஒகேனக்கல்‌ சுற்றுலா மையத்தை சர்வதேச தரத்துக்கு சீரமைத்து தருவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்‌ என்று அவர் கூறினார்.