இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில்  கர்சர்வேடிவ் கட்சி வெற்றி: போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார்!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், போரிஸ் ஜான்சன் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கிறார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல், கடந்த 12 ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியானது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஆதரித்து பிரச்சாரம் செய்து, இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் கன்சர்வடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன்.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொழிலாளர் கட்சி.

பிரிட்டன் வெளியேறுவது (Britain Exit –  Brexit ) என்பதன் சுருக்கமான பிரக்சிட் என்பதே இந்த தேர்தலின் முக்கிய பிரச்சாரமாக இருந்தது.

இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்பதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

650 உறுப்பினர்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 326  இடங்கள் தேவை.

ஆனால், கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து நின்ற தொழிலாளர் கட்சி  203 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இதில் 12 பேர் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்கள்.

வெற்றிக்குப்பின், தமது ஆதரவாளர்களிடையே பேசிய போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பல தடைகளை தாண்டி நாம் சாதித்துவிட்டோம். 1980 க்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு பெரும்பான்மை பெற்றுத்தர பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த பெரும்பான்மை வெற்றியால் நாம் இப்போது பிரெக்சிட்டை நிறைவேற்றப்போகிறோம். சந்தேகங்களுக்கும், நிலையற்ற தன்மைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிரெக்சிட்டை நிறைவேற்றுவோம் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.