வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகள் எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு;   தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 

தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 2 மேயர் பதவிகள் எஸ்.சி பிரிவுக்கும்,  7 மேயர்கள் பதவிகள்  பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு தேர்தலை அறிவிக்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வேலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு மேயர் பதவி ரிசர்வ் பிரிவுக்கு ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது.

இதிலும் வேலூர் மாநகராட்சி மேயர் பதவி ரிசர்வ் தொகுதி பெண்களுக்கு என்றும், தூத்துக்குடி ரிசர்வ் தொகுதியில் ஆண், பெண் போட்டியிடும் பொது தொகுதியாகவும் அறிவிப்பட்டுள்ளது.

பெண்களுக்கு 7 மாநகராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி,  நெல்லை,  நாகர்கோவில்,  திண்டுக்கல்,  மதுரை,  கோவை, .ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள சென்னை,  ஆவடி, சேலம்,  திருப்பூர்,  தஞ்சாவூர்,  ஓசூர் ஆகிய ஆறு மாநகராட்சி மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண், பெண் இருபாலரும் போட்டியிடலாம். மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகள் கட்டாயம் பெண் மேயர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சியில் பெண்களுக்கு 55 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.