உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடி – அதிமுகவுக்கு மரண அடி: சி.வி.சண்முகத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி மன்ற தேர்தலை 27 மாவட்டங்களுக்கு நடத்தலாம் என்றும், புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களுக்கு, விதிமுறைகளை நிறைவேற்றிவிட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு, திமுகவுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், இந்த தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மரண அடி என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கை, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு, பிறகு மீண்டும் டிசம்பர் 9 ஆம்தேதி, அதே டிசம்பர் 27, 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென அறிவிக்கை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்று கூறியது.

மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களுக்கு, விதிமுறைகளை நிறைவேற்றிவிட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும், அதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தற்போது விவாதமாகி உள்ளது.

தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் வில்சன், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு சார்பில்  2016 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்,  1991 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடைபெறும் என்று, உயர்நீதிமன்றத்தில், நாங்கள் தொடுத்த அவதூறு வழக்கில், தமிழக அரசின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றத்தில் ஒரு நிலைப்பாடும், உயர்நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இது முரண்பாடான ஒன்றாகும் என்று கூறி இருக்கிறார்.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பில் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி தேர்தல் நடத்தலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

திமுக தேர்தலை எதிர்கொள்ள பயந்து கொண்டு, பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்த முயல்கிறது. இதில் அதிமுகவுக்கும், மக்களுக்கும் எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த தீர்ப்பு திமுகவிற்கு சம்மட்டி அடி என்றால், அதிமுகவுக்கு அது மரண அடி என்றார்.

மேலும், மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை. நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை. மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.