பெண்களுக்கான மாநகராட்சியில் யாரை நிறுத்துவது? குழப்பத்தில் திமுக – அதிமுக!

தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில், தூத்துக்குடி, வேலூர் ஆகியவை ரிசர்வு தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் ரிசர்வு தொகுதி பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். தூத்துக்குடியில் ஆண் – பெண் ஆகிய இரு பாலரும் போட்டியிடலாம்.

இதுதவிர, திருச்சி,  நெல்லை,  நாகர்கோவில்,  திண்டுக்கல்,  மதுரை,  கோவை, .ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 9 மாநகராட்சிகள் தவிர, சென்னை,  ஆவடி, சேலம்,  திருப்பூர்,  தஞ்சாவூர்,  ஓசூர் ஆகிய ஆறு மாநகராட்சி மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சிகளில் யாரை மேயர் ஆக்குவது என்பது குறித்து, திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளிலுமே கடும் போட்டி நிலவுகிறது.

கூடுமானவரை, அந்தந்த மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, மேயர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி மேயர் நேரடியாக தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், ஒவ்வொரு கட்சியிலும், மேயர் பதவியை குறி வைத்து, கவுன்சிலராக களம் இறங்குபவர்கள், செல்வாக்கு பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க முடியும்.

அதனால், இந்தப்போட்டி மதுரையில் இப்போதே தொடங்கி விட்டது. ஆனாலும், யாரை தேர்தலில் நிறுத்துவது என்பதில் மட்டும், அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களுமே ரகசியம் காத்து வருகின்றனர்.

குறிப்பாக, மதுரை மாநகராட்சி மேயர் பதவியை முன்வைத்து, அதிமுக – திமுகவை சேர்ந்த இந்நாள், முன்னாள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அந்தந்த கட்சியில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கருதி, திமுக தரப்பில்,  அக்கட்சியின் மாநகர பொறுப்பாளர் தளபதி தனது மகள் மேகலாவையும்,  சகோதரி காந்திமதியையும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்க வைத்துள்ளார்.

இதுதவிர, முன்னாள் திமுக கவுன்சிலர் சசிகுமார் மனைவி வாசுகி, சின்னம்மாள்,  முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மனைவி ராணி ஆகியோரும் விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை, முன்னாள் கவுன்சிலர்களும், முக்கிய பெண் நிர்வாகிகளுமான சண்முகவள்ளி,  கண்ணகி ஆகியோர் மேயர் பதவியை குறிவைத்து விருப்பமனு கொடுத்துள்ளனர்.

இதுதவிர, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா குடும்பத்தை சேர்ந்த பெண்களும்  கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

பாஜகவில் மாநில மகளிர் அணி தலைவரும், தேசிய மின்தொகுப்பு மைய கழக அலுவல் சாரா இயக்குனருமான ஏ.ஆர்.மகாலட்சமி, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் விருப்பமனு கொடுத்துள்ளார்.

இதேபோல், பெண்களுக்கான மாநகராட்சி ஒவ்வொன்றிலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்களுமே, மேயர் பதவியை குறி வைத்து கவுன்சிலராக போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளை எக்காரணம் கொண்டும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காது என்று கூறப்படுகிறது. மற்ற மாநகராட்சிகளே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், இப்போதே அதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கட்சியிலும் சூடுபிடித்துள்ளது.