உள்ளாட்சி தேர்தல்: திமுக – அதிமுக மா.செக்கள் முடிவு செய்யும் கூட்டணி பங்கீடு!

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்  அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால், அறிவிக்கப்பட்ட தேதிகளில், ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, வரும் 27 மற்றும் 30 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், 2016ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில், திமுக தொடர்ந்த வழக்கில் 1991 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாக, அரசின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறி இருந்தார்.

உச்சநீதி மன்றத்தில் ஒரு கருத்தையும், உயர்நீதி மன்றத்தில் ஒரு கருத்தையும் கூறி இருந்த அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு எதிராக, மீண்டும் நீதி மன்றத்திற்கு செல்லலாமா என்ற ஆலோசனையும் திமுக தரப்பில் நடந்து கொண்டு இருக்கிறது.

எனினும், உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என்று, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டன என்றே கூறப்படுகிறது.

நடைபெறப்போவது, ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால், அந்தந்த மாவட்ட செயலாளர்களே, தங்கள் கூட்டணி கட்சிக்கு எந்தெந்த இடங்களை ஒதுக்குவது என்று முடிவு செய்வார்கள் என்று தலைமை முடிவு செய்துள்ளது.

அதே சமயம், யார் யாருக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்குவது என்பதை திமுக – அதிமுக கட்சி தலைமை ஏற்கனவே சுமூகமாக முடித்து விட்டன.

அதனால், தற்போது, திமுக மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து இறுதி செய்து வருகின்றனர்.

கூடுமானவரை திமுக மற்றும் அதிமுகவினர், எழுபது சதவிகிதம் வரை தங்களுக்கும், முப்பது சதவிகிதம் வரை கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்குவதாக பேசியுள்ளனர்.

தேர்தலுக்கான காலக்கெடுவும் குறுகியதாக இருப்பதால், பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல், கூட்டணி கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகம் இருப்பதால், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், பாமக கூடுதல் இடங்களை அதிமுகவிடம் இருந்து பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு தென்மாவட்டங்களில் உரிய இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் உரிய இடங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.