ரஜினியின் 70-வது பிறந்தநாள்: பிரபலங்கள் போடும் அரசியல் கணக்குகள்!

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை, வழக்கமான உற்சாகத்துடன் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். வழக்கம் போல, ரஜினிகாந்த் சென்னையில் இல்லை.

திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து கூறினார்.

ஆனால், பல பிரபலங்களுக்கு வாழ்த்து கூறும் பிரதமர் மோடி, ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவு கூட வெளியிடவில்லை.

இது அரசியல் வட்டாரத்தில் சில யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், மகராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக விளங்கிய, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மையில், பிரதமர் மோடி, ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தால், அது ஏதாவது ஒரு வகையில் செய்தியாக வெளிப்பட்டு இருக்கும். ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.

ரஜினிகாந்த் பாஜகவுக்கு வருவார், அவரை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்று ஆரம்பத்தில் பாஜக நினைத்தது.

அதை ரஜினி விரும்பாததால், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவரோடு இணைந்து பயணப்படலாம் என்றும் பாஜக கணக்கு போட்டது.

ஆனால், தம்மீது காவி சாயம் பூசுவதை ஏற்கமுடியாது என்று, ரஜினி அதற்கு பதிலடி கொடுத்து விட்டார். இதன் காரணமாகவே, ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

மறுபக்கம், மக்கள் மத்தியில் தமது செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய, நடிகர் ரஜினி, சில தனியார் ஏஜென்சி மூலம் அவ்வப்போது ஆய்வுகளை நடத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

பாபா படம் வெளியான சர்ச்சையான காலகட்டத்தில் கூட, மக்களின் ரீ ஆக்ஷன் எப்படி இருக்கிறது என்று, வீடியோ காமிராக்கள் மூலம் பல திரையரங்குகளில் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டார் என்றும் சினிமா துறையை சேர்ந்த ராசி அழகப்பன் கூறி இருக்கிறார்.

பாபா பட ரிலீசின்போது, தம்மை பற்றிய மக்களின் கருத்துக்கள் திருப்தியாக இல்லை என்பதால், அவர் அமைதி காத்தார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், தற்போதைய அரசியலில் சூழலில், தம்மை பற்றிய மக்களின் எதிர்பார்ப்பையும், ரஜினி சில ஆய்வுகள் மூலம் அறிந்து வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அந்த ஆய்வின்படியே, அவர் பாஜகவை விட்டு சற்று விலகி இருப்பதாகவும், அதன் காரணமாக பிரதமர் மோடிக்கு, ரஜினி மீதான அரசியல் நம்பிக்கை குறைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

ரஜினியின் அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மோடி மற்றும்  அமித்ஷாவால் கூட அறிய முடியாத அளவுக்கு, ரஜினி நழுவி விடுகிறார் என்று இங்குள்ள பாஜக பிரமுகர்களே கூறுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால்தான் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.

அப்படி என்றால், ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று இங்குள்ள சில பிரபலங்கள் கணக்கு போடுகின்றனர்.

உண்மையில், ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறாரா? அல்லது வழக்கம் போல நழுவி விடுகிறாரா? என்பதற்கு ரஜினியால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.