திமுகவில் இருந்து பழ கருப்பையா – காங்கிரசில் இருந்து ராயபுரம் மனோ விலகல்!

திமுகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான பழ கருப்பையா விலகி உள்ளார்.

அதிமுகவில் எம்.எல்.ஏ வாக இருந்த பழ கருப்பையா, கடந்த தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தற்போது, திமுகவில் இருந்து அவர் விலகி உள்ளார். ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.

நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வெறும் அறிக்கைகள் மட்டுமே தீர்வாகாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், வெறும் பணத்தை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி, கார்பரேட் நிறுவனம் போல கட்சியை வழிநடத்தும் பாங்கும் தமக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்து வந்த ராயபுரம் மனோவும் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி தலைவர் ஆனதும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளராக ராயபுரம் மனோ நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அழகிரி கொடுத்த புதிய நிர்வாகிகள் பட்டியலை, டெல்லி தலைமை அப்படியே வெய்டிங் லிஸ்டில் வைத்துள்ளது.

மேலும், ராயபுரம் மனோ திமுகவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், கூட்டணி கட்சியில் இருந்து வருபவர்களை கட்சியில் சேர்ப்பது, கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று கருதுவதால், திமுக அதற்கு சம்மதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக ராயபுரம் மனோ, முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

வடசென்னை பகுதியில் வலுவான பொருளாதார பின்னணியும், மக்கள் செல்வாக்கும் கொண்ட ராயபுரம் மனோ, திமுகவிற்கு வருவதை, திமுக விரும்பினாலும், அங்குள்ள சில திமுக புள்ளிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், இன்னும் சில நாட்களில், ராயபுரம் மனோ எந்த கட்சியில் இணைகிறார் என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது.