ஜெயிக்கிற கட்சிக்கு தேர்தல் வியூகம்: பிரசாந்த் கிஷோரின் மார்கெட்டிங் திறமை!

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், கட்சிகளின் தேர்தல் வியூகத்தில் கார்பரேட் நுணுக்கங்களை இணைத்து வெற்றி காண வழி வகுப்பவர் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர்.

2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து, மோடியை பிரதமர் ஆக்கினார் என்று, பொதுவெளியில் தம்மை அறிமுகம் செய்துகொண்டு பிரபலம் ஆனார்.

அதற்கு பின்னர், பாஜகவில் தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி தரவேண்டும் என்று, பிரதமர் மோடியை வலியுறுத்தியபோது, கட்சியில் யாருக்கு எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது குறித்து, ஆர் எஸ் எஸ் தான் முடிவு செய்யும் என்று கழற்றி விடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

அந்த கோபத்தில், குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரசுக்கு வியூகம் வகுத்து கொடுத்துள்ளார். ஆனால், சுனில் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த வியூகம், குஜராத்தில் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள உதவி இருக்கிறது.

அடுத்து, பீகாரில் நிதிஷ் குமாருக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுத்தார். அங்கு அவர் வெற்றி பெற்றதும், கட்சியின் துணை தலைவர் பதவியை பெற்றுக்கொண்டார். அங்கிருந்தே மற்ற மாநிலங்களில் தமது பணியை தொடங்கி உள்ளார்.

ஆந்திரா வந்து, ஜகன்மோகன் ரெட்டிக்கு, தேர்தல் களப்பணி ஆற்றினார். ஜகன் வெற்றி பெற்றதும், இவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுப்பி விட்டார்.

அடுத்து, மேற்கு வங்கம் சென்று மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார்.

எப்படியாவது தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்று விரும்பிய பிரசாந்த், கடந்த மக்களவை தேர்தலில், எடப்பாடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

அந்த வியூகம் எந்த அளவுக்கு பலன் கொடுத்தது என்று அனைவருக்கும் தெரியும்.

அதே சமயத்தில், கமலுக்கும் வியூகம் வகுத்துக் கொடுக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலை இருந்தது.ஆனால், ஒரே நேரத்தில் இரு எதிரெதிர் கட்சிகளுக்கு செயல்படுவது சரியாக வராது என்று கமல் ஒதுங்கிக் கொண்டார்.

அடுத்து, ரஜினி, விஜய் போன்றவர்களை பிரசாந்த் அணுகி, சிலவற்றை செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், கலைஞர் குடும்பத்திற்கு நெருக்கமான சிலரை பிடித்து திமுகவை நாடியுள்ளார். அவருக்கு, அங்கே உரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஏற்கனவே இருக்கும் சுனில் குழுவையும் பயன்படுத்தி வியூகம் வகுக்குமாறு திமுக கூறியது. ஆனால், அது தமக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பிரசாந்த் கூறியுள்ளார்.

இதற்கு காரணம், அங்கு ஏற்கனவே திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்து வந்த சுனிலுக்கு, பிரசாந்த் நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்த சிலர் பணியாற்றி உள்ளனர்.

பிரசாந்தின் அணுகுமுறை ஒத்துவராததால், அவர்கள் அங்கிருந்து பிரிந்து மற்றொரு பெயரில் அந்த பணிகளை செய்து வந்துள்ளனர். அவர்களை சுனிலும் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

அதனால், திமுகவில் இருந்து அந்த குழுவை வெளியேற்றும் விதத்தில், பிரசாந்த் பணவிஷயத்தில் பெரிய அளவில் சமரசம் செய்து கொண்டு திமுகவிடம் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக, சுனில் தமது குழுவினருடன் திமுகவில் இருந்து விலகி வந்துள்ளார்.

பிரசாந்தின் அணுகுமுறை பிடிக்காமல், அவர் நிறுவனத்தில் பணியாற்றிய, தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் அவரிடம் இருந்து விலகி வந்துள்ளனர்.

தற்போது, தமிழோ, தமிழக வரைபடமோ, தமிழக அரசியல் பின்னணியோ கொஞ்சமும் தெரியாத, வெளிமாநில இளைஞர்கள்தான் பிரசாந்திடம் பணியாற்றுகின்றனர்.

ஜெயிக்கும் நிலையில் இருக்கும் கட்சிக்கு மட்டுமே, தேர்தல் வியூகம் வகுக்கும் குணம் கொண்ட பிரசாந்த் கிஷோர், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றிக்கு எந்த அளவுக்கு தமது பங்களிப்பை தரப்போகிறார் என்று அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.