கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவெற்றம்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில்,  நேற்று, மாநிலங்களவையிலும்  நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவுக்கு ஆதரவாக 125  வாக்குகளும், எதிராக  வாக்களிக்க, 105 வாக்குகள் பதிவாகின.

சிவசேனா வாக்களிப்பிலிருந்து வெளியேறுகிறது என்று அக்கட்சியின் சஞ்சய் ராவத் கூறினார்,  இதற்கு அமித் ஷா சிவசேனா ஏன் பாதை மாறுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

மசோதாவை தாக்கல் செய்து அமித் ஷா பேசுகையில், இந்திய முஸ்லீம்கள்,  நம் நாட்டின் குடிமக்கள். அவர்கள் மீது அடக்குமுறை ஏதும் கொண்டு வரப்படாது. அவர்கள் கவலைப்பட தேவையில்லை. அசாம் மக்களின் உரிமைகளை பா.ஜ.க.அரசு காக்கும்’ என்றார்.

தொடர்ந்து அமித் ஷா பேசுகையில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட ராஜ்யசபா நேரலை ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ‘அமித்ஷா பேசும் போது, குறுக்கிடக்கூடாது; கூச்சல் போடும் எம்.பி.,க்களின் பேச்சு பதிவு செய்யப்படாது’ எனவும் சபாநாயகர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.

பல உறுப்பினர்களும் கடுமையாக எதிர்க்க அதற்கு பதிலளிக்கும் விதமாக அமித் ஷா பேசும்போது, “குடியுரிமை சட்ட திருத்த மசோதா முஸ்லிம் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானது அல்ல. இது அரசியல் சாசன பிரிவு 14க்கு எதிரானதும் அல்ல.

இம்மசோதா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தவறான தகவல்களை பரப்புகிறார். வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

இந்தியா, பாகிஸ்தான்  பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், இம்மசோதாவுக்கு தேவை இருந்திருக்காது.

மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதற்கு காரணம் ஜின்னா தான். ஆனால் அதற்கு காங்கிரஸ் கட்சி எப்படி ஒப்புக் கொண்டது? காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதை செய்தாலும் மதச்சார்பின்மை என மக்களை ஏமாற்றுகிறது.

ரோஹின்கியாக்கள் நேரடியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவது இல்லை. அதனால் தான் அவர்கள் இம்மசோதாவில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் வங்கதேசத்துக்கு சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள்.

நேற்று இம்மசோதாவை ஆதரித்த சிவசேனா, இன்று எதிர்க்கிறது. ஒரு இரவுக்குள் என்ன நடந்தது என்பதை அவர்கள் மஹாராஷ்டிர மக்களுக்கு சொல்ல வேண்டும்.

3 முதல் 4 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் மசோதாக்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. பாகிஸ்தான் பிரதமரின் கருத்தும், காங்கிரஸ்  கட்சியின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன” என்று பேசினார்.

குடியுரிமை மசோதாவை தேர்வுகுழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தீர்மானம் கொண்டுவந்தன.

இதற்காக நடந்த ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 99 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக 124 எம்.பி.,க்களும் வாக்களித்தனர்.

பெரும்பான்மை கிடைக்காததையடுத்து இத்தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது.

இதில், 125 எம்.பி.,க்கள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்,  105 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.