தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தற்போதைய நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் உள்ளுக்குள் விரும்பவில்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலின் தாக்கம், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது இவ்விரு கட்சிகளின் கருத்து.

அதிமுக ஆளும் கட்சியாக இருப்பதால், மறைமுக தேர்தலில் அதன் பலத்தால், பல உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிவிடும் என்பது திமுகவின் எண்ணம்.

அதே சமயம், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில், அக்கட்சிகளை திருப்தி படுத்த முடியாமல் போனால், அது அடுத்த சட்டமன்ற தேர்தலில், சிக்கலை ஏற்படுத்தும் என்பது அதிமுகவின் எண்ணம்.

எனவே, கூடுமானவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதே இரு கட்சிகளுக்கும் நல்லது என்பதே இப்போதைய நிலை.

எனினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. எனவே, திமுகவின் நீதிமன்ற நடவடிக்கை காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனது என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது.

ஆனால், அதிமுக அரசின் குளறுபடிகள் காரணமாகவே, நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று திமுகவும் தனது நிலையை மக்கள் மன்றத்தில் பதிய வைத்து வருகிறது.

உச்சநீதி மன்றத்தின் உத்தரவு காரணமாகவே, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம் தேதி அறிவித்த தேர்தலை ரத்து செய்து, மீண்டும் 7ஆம் தேதி, புதிய ஆணையை வெளியிட்டது.

அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளாட்சிமன்ற தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று, திமுக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையில், கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் உள்ளபடி, இட ஒதுக்கீடு முறைகள் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணி நடந்துள்ளது.

வார்டு, அவற்றின் எல்லை, மக்கள்தொகை என அனைத்தும் மாறுபட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீடு மட்டும் 2011 மக்கள்தொகை அடிப்படையில் வழங்காமல், 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல என்பன உள்ளிட்டவற்றை திமுக தனது மனுவில் கூறியுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணை ஒரே நாளில் முடியுமா? அல்லது மேலும் சில நாட்கள் தொடருமா? என்று தெரியவில்லை.

எனினும், உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என்றே திமுக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவும் இதைத்தான் விரும்புகிறது என்று சொல்லப்படுகிறது.