தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைக்கும் கார்த்தி சிதம்பரம்!

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். பாஜகவுக்கு எதிராக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்பதில் முன்னணியில் இருப்பவரும் அவரே.

திகார் சிறைக்கு வந்த பிறகு, அவரது செல்வாக்கு கட்சியில் மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில்தான், அவரது மகனும் எம்.பி யுமான கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்து கைகளை நகர்த்தி வருகிறார்.

தற்போது, காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தபோதும், அவர் சிறையில் இருந்த போது, தமிழக காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் சிதம்பரத்துக்கு திருப்தியை ஏற்படுத்தும் நிலையில் இல்லை.

அதே சமயம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அம்மாநில காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் மாநிலமே ஸ்தம்பித்தது.

ஆனால், அந்த அளவுக்கு இல்லை என்றாலும், சிதம்பரம் கைதுக்கு எதிராக, தமிழகத்தில் கணிசமான அளவில் கூட எதிர்ப்பு பதிவு செய்யப்படவில்லை என்ற ஒரு வருத்தம் சிதம்பரத்திற்கு உள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்திற்கும் இந்த வருத்தம் உள்ளது.

சிதம்பரம் ஆதரவாளர் என்ற முறையில், அழகிரிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தாலும், அவர் தமது நடவடிக்கைகள் மூலம், ஒரு பொதுவான தலைவராகவே இதுவரை தம்மை அடையாளப்படுத்தி வருகிறார்.

மேலும், மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களை மாற்றுவதற்கு ஒரு புது பட்டியலை தயார் செய்து, அதை டெல்லி தலைமைக்கும் அனுப்பி உள்ளார். இது அக்கட்சியை சேர்ந்த பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், இப்போதைக்கு இந்த மாற்றம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றே பலரும் கருதுகின்றனர். டெல்லி தலைமையும், அந்த பட்டியலை அப்படியே வெய்டிங் லிஸ்டில் வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக தம்மை நியமிக்க வேண்டும் என்று, தமது தந்தை சிதம்பரத்திடம், கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், சிதம்பரம் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மறைந்த மூப்பனாரின் மகன் வாசனுக்கு கிடைத்த அந்தஸ்து, கட்சியில் தமக்கு கிடைக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் விரும்புவதாக தெரிகிறது.

அதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியே பொருத்தமாக இருக்கும் என்று கார்த்தி சிதம்பரம் நினைப்பதால், அதற்கான தீவிர நடவடிக்களில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.