கலைஞரிடம் நான்  வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து!

தென் சென்னை மாவட்ட இளைஞரணி, மாநிலத்தில் அதிக அளவிலான, 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து, திமுக தலைவர்  ஸ்டாலின் கையால் விருது வாங்கியது.

அப்போது, நான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.

திமுக இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், இளைஞர் அணியில் புதிதாக 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட வாரியாக நடந்த உறுப்பினர் சேர்ப்பில் தென் சென்னை மாவட்டம் அதிக உறுப்பினர்களைச் சேர்த்தது. அதாவது  1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்தது.

இதற்கு பாராட்டு தெரிவித்து, சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

அப்போது உடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா சுப்ரமணியன், சென்னை திமுக இளைஞரணி துணை செயலாளர்கள் உடனிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் , “நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன்;

நன்றாக உழைப்பார் என உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்  என்று வாழ்த்தினார்.