2000  ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படுமா? மத்திய அமைச்சர் விளக்கம்!

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய் நோட்டுக்கள் அரசால் வாபஸ் பெறப்படும் என்றும், 1000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்றும், நாடு முழுவதும்  மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, மக்களவையில் நேற்று, சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் கேள்வி எழுப்பினார்.

அவர் பேசும்போது,  2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆதலால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற்று,  மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது. இதுகுறித்து விளக்க வேண்டும் என்றார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு குறித்து இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. யாரும் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை

பணமதிப்பிழப்பின் நோக்கம் கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வரிசெலுத்துபவர்களை அதிகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஊக்கமளித்தல் ஆகும்.. இந்த நோக்கத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 74 ஆயிரத்து 100 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019, டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி சந்தையில் 22 லட்சத்து 35 ஆயிரத்து 600 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் சந்தையில் புழக்கத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி 2016-17-ம் ஆண்டில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 072 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2017-18-ம் ஆண்டில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 783 கள்ள நோட்டுகளும், 2018-19ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 389 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் பரிமாற்ற அளவு 2 ஆயிரத்து 71 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிமாற்றம், 2018-19-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 134 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்