இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில்  குடியுரிமை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை!

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத  பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,  2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து, மக்களவையில் நேற்று மசோதா தாக்கல் நிறைவேறியது.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், இம்மசோதா முஸ்லிம்களுக்கும்,  தமிழர்களுக்கும் எதிரானது என்று கூறினார்.

இந்நிலையில்,  இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை குறித்து முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இதுகுறித்து தமது  டுவிட்டரில் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

அமமுக பொது செயலாளர் தினகரன், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும்.

எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டும் என்று  டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.