ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை: மீறினால்  நடவடிக்கை!

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால், சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

2016 ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார்.  2021 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்றும்  அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. அதே சமயம், ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தான் யார் வலையிலும் சிக்கவில்லை, தனக்கு காவி வண்ணம் பூசவேண்டாம் என்றும் தமது நிலையையும் தெளிவு படுத்தி இருந்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கலீல் சார்பில், இன்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்  உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது என மாநிலத்தலைமை அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

அதனால், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ,  ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ,  தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.