பவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்!

சைவ நாயன்மார்களால் பாடல் பெற்ற முக்கிய தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுவது பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரியுடன் பவானி ஆறு சங்கமிக்கும் இந்த இடத்தில், அமுதநதி என்ற புராண நதியும் கலப்பதாக ஐதீகம்.

மூன்று நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால், இந்த இடத்திற்கு கூடுதுறை என்றும், இங்குள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம் சங்கமேஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.

பவானி கூடுதுறையில், ஆடிப்பெருக்கு, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

அதேபோல், சபரிமலை சீசன் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் இருந்து, தை மாதம் வரை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தவறாமல், பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்துக்கும் வந்து வழிபாட்டு செல்வது வழக்கம்.

அதனால், சபரிமலை சீசனில், தினந்தோறும் பவானிக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தபோதும், அவர்களால் கொட்டப்படும் உணவுப்பொட்டலங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை.

அந்த குப்பைகள் அனைத்தும், சங்கமேஸ்வரரர் கோவிலுக்கு கிழக்கில் ஓடும் காவிரி ஆற்றிலும், மேற்கில் ஓடும் பவானி ஆற்றிலும் கொட்டப்படுவதால், ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே, ஆலைக்கழிவுகளால் மாசுபட்டுள்ள காவிரி மற்றும் பவானி ஆறுகள், சபரிமலை உள்ளிட்ட கோவில் திருவிழா காலங்களில், பக்தர்களால் கொட்டப்படும் குப்பைகளால் மேலும் மாசுபட்டு வருகிறது.

எனவே, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவானி நகர மக்களும், வணிகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.