வேட்பு மனுத்தாக்கல் – ஏலத்திற்கு மத்தியில் வரிசைகட்டும் வழக்குகள்! உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்பதால், தேர்தல் நடக்குமா? தள்ளிப்போகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, திமுக மற்றும் சிலர்,  ஏற்கனவே  தாக்கல் செய்த மனுக்களை  விசாரித்த உச்சநீதி மன்றம், புதிதாக பிரித்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, வரும் 27 மற்றும்  30 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு வரையறை, இடஒதுக்கீடு போன்ற சட்டவிதிகளை நிறைவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

இதனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

எனினும், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று, ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகே உள்ள நடுக்குப்பம் என்ற ஊரில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத்தலைவர் பதவி ரூ. 15  லட்சத்திற்கும் ஏலம் ஏலம் விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சி தலைவர் விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளாட்சி தேர்தலில், மறைமுக தேர்தலுக்கு வகைசெய்யும்  அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி, விசிக தலைவர் திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரியே அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது என்பதால் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என பிறப்பிக்கப்பட்ட அவசரசட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை எனவும், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவும்  விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராகவும், மறைமுக தேர்தலுக்கு எதிராகவும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனால், தமிழகத்தில் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் குறித்த காலத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.