அதிகாரம் நிறைந்த பிரதமரும் – அதிகாரமற்ற அமைச்சர்களுமே  பொருளாதார மந்தநிலைக்கு காரணம்: ரகுராம் ராஜன் கருத்து!

பிரதமர் அலுவலகத்தில் மட்டும் அதிகாரங்கள் குவிந்திருப்பதே, நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையின் நடுப்பகுதியில், ஆழ்ந்த சிக்கலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் அலுவலகத்தில் மட்டும் அதிகாரக்குவிப்பை வைத்துக்கொண்டு,  அமைச்சர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆறு மாதங்களைச் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது.

அடுத்துவரும் காலாண்டுகளிலும் இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவின் தாக்கம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கான காரணங்கள், அதை மீட்பதற்கான வழிகள் குறித்து இந்தியா டுடே இதழில் கட்டுரை ஒன்றை  எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

என்ன தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, தற்போதுள்ள ஆளும் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட இயல்பிலிருந்து தொடங்க வேண்டும்.

பிரதமர் அலுவலகம் மற்றும் அதை ஒட்டியுள்ள சிறிய ஆளுமைகளிடம் இருந்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அத்துடன், சிந்தனைகள் மற்றும் செயல்படுத்துவது எல்லாமே தொடங்குகிறது.

பிரதமர் அலுவலகத்தில் உள்ள வல்லுனர்களின் திறன், கட்சி மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடுதல்களுக்கு வேண்டுமானால் சரியாக பொருந்தும்.

ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களில், அவர்களின் சிந்தனைகள் மற்றும்  திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்பார்க்கும் அளவுக்கு பலனை தராது.

குறைவான நிபுணத்துவம் உள்ளவர்களால் , மாநில அளவிலும், தேசிய அளவிலும் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது,  இயங்குகிறது என்பது குறித்து அறிய முடியாது

அதிகபட்சமான மையப்படுத்துதல்,  அதிகாரமற்ற அமைச்சர்கள்,  ஒத்திசைவான தொலைநோக்குப் பார்வைக் குறைவு போன்றவை இல்லாமல் சீர்திருத்த முயற்சிகளைப் பிரதமர் அலுவலகம் மட்டுமே செயல்படுத்த முயல்வது பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும், கவனச்சிதறல்களை உண்டாக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற அடிப்படையை வைத்துத்தான் ஆட்சிக்கு வந்தது.

ஆனால், இந்த வார்த்தை அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது அரசு சிலவிஷயங்களைத் திறமையாகச் செய்யும், ஆனால், அதே அளவுக்கு மக்களும், தனியார் துறையும் சிறப்பாக, சுதந்திரமாகச் செய்ய விடுவதில்லை.

பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்பதை முதலில் பிரதமர் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்வதுதான் பிரச்சினையை அடையாளம் காணும் முதல் புள்ளியாகும்.

பிரச்சினை முழுவதையும் அறிவதற்குத் தொடக்கப்புள்ளியை நாம் அங்கீகரிப்பது அவசியம். உள்ளார்ந்த, வெளிப்புறத்தில் இருந்து வரும் ஒவ்வொரு விமர்சனங்களையும் அரசியல் ரீதியானது என்று எண்ணக்கூடாது, இந்த பொருளாதார பிரச்சினை தற்காலிகமானது என்று பேசுவதும், புள்ளிவிவரங்களையும், மோசமான செய்திகளை அடக்குவதாலும் பிரச்சினைகள் நாளடைவில் மறைந்துவிடும் என்பதை நிறுத்த வேண்டும்.

ஏனென்றால், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு மந்தநிலையின் நடுப்பகுதியில் இருக்கிறது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தகுந்த பொருளாதார அழுத்தம் இருந்து வருகிறது.

கட்டுமானத்துறை,  ரியல் எஸ்டேட்,  உள்கட்டமைப்பு ஆகியவை ஆழுந்த சிக்கலில் இருக்கின்றன. வங்கி அல்லாத நிறுவனங்களும் பிரச்சினையில் இருக்கின்றன.

இதன் காரணமாக மோசான வாராக்கடன் அதிகரிப்பும் வங்கிகளுக்கு உருவாகும் சூழல் இருக்கிறது.

இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது அவர்களிடையே மனவேதனையையும், அழுத்தத்தை உருவாக்கும்.

உள்நாட்டு தொழில்களும் முதலீடு செய்வதில்லை, முதலீடும் தேக்கமடைந்து இருப்பது ஏதோ மிகப்பெரிய தவறு நடக்கப்போவதற்கான வலுவான அறிகுறியாகும்.

நிலம் கையகப்படுத்துதலை முறைப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்கள், நிலையான வரிச்சட்டங்கள்,  முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம்,  திவால் சட்டங்களை வேகமாகச் செயல்படுத்துதல், முறையான மின்கட்டணம், தொலைத்தொடர்புத் துறையில் ஆரோக்கியமான போட்டியைத் தக்கவைத்தல், விவசாயிகளுக்குக் கடன் மற்றும் உள்ளீடுகள் அளித்தல் முக்கியமானவை.

நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமானவரிக் குறைப்பு செய்வதில் இருந்து சற்று விலகி இருந்து, முதலில் மத்திய அரசு தங்களின் நிதிகளைக் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு அதிகமான நிதியை அளிக்க வேண்டும்.

2024 ம் ஆண்டுக்குள் 5  லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், அந்த பொருளதாரத்தை எட்டுவதற்கு ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லாததை காட்டுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் நீடித்து வந்தபோதிலும், இன்னும் சில பிரச்சினைகளை தொடர்ந்து வருகிறது.  எனவே, மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கை தேவைப்படுகிறது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்