கடலூர் – புதுச்சேரியில் பிரபலமாகும் வெங்காய அரசியல்!

அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளும், மீம்ஸ்களும் டிரெண்டிங் ஆவது வாடிக்கையான ஒன்று.

ஆனால் அதை மையப்படுத்தி நடக்கும் நிகழ்வுகள் அதைவிட அதிக அளவில் பிரபலமாகும்.

அந்த வகையில், வெங்காய விலை உயர்வை மையப்படுத்தி கடலூரில் நடக்கும் சம்பவங்கள் கடந்த இரு நாட்களாக அதிக அளவில் பேசு பொருளாகி வருகின்றன.

கடலூரில் நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல், கடலூரில் கம்பியூட்டர் மற்றும் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, வெங்காயத்தை பயன்படுத்தி புதிய வியாபார உத்தியை தொடங்கி உள்ளது.

அதாவது, அந்த நிறுவனத்தில் கம்பியூட்டர் லேப்டாப் ஒன்று வாங்கினால், ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு முதல் ஹோட்டல்கள் வரை அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் வெங்காயம். கடந்த சில நாட்களாக அதன் விலை 200 ரூபாய் வரை சென்றுள்ளதால், அதன் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது.

இது சாமானிய மக்கள் தொடங்கி வசதியான மக்கள் வரையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல உணவு விடுதிகளில் வெங்காயத்திற்கு பதில், முட்டை கோஸ் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு, இனிப்புடன் வெங்காயமும் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன