கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி முகம்: எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மை உறுதியாகிறது!

கர்நாடகாவில்  15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த  இடைத்தேர்தலில், ஆளும் பாஜக ஒரு தொகுதியில் வென்றுள்ளது. பதினொரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏ க்கள் தேவைப்படும் நிலையில், 12 எம்.எல்.ஏ க்கள் வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால், எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர், கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய எடியூரப்பா, பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இடைத் தேர்தலில் வென்ற புதிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, பாஜக தலைமையுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.