முருங்கைக்காய் விலை கடும் உயர்வு: கிலோ 380 ரூபாய்க்கு  விற்பனை!

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ 380 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.

வெங்காயத்தின் விலை, கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதைத் தடுக்க, நியாய விலைக் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் வெங்காய விற்பனை செய்ய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனினும் வெங்காயத்தின் விலை சகஜ நிலைக்கு வரவில்லை.

இதற்கிடையில் சென்னை கோயம்பேடு சந்தையில், முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று, ஒரு கிலோமுருங்கைக்காய் 380 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இதனால் சென்னையின் பல ஹோட்டல்களில் முருங்கைக்காய் சாம்பார், பரிமாறப்படுவது குறைந்துள்ளது.

ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில், குறைந்த அளவிலான முருங்கைக்கைகளே விற்பனை ஆகிறது. பல கடைகளில் முருங்கைக்காய் விற்பனையே இல்லை.

மழை காரணமாக, திண்டுக்கல் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் முருங்கைக்காயின் வரத்து குறைந்ததால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.