ரிசர்வு வங்கியின் ரூ.1 லட்சத்து  50 ஆயிரம் கோடி   800  முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு! 

ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி 800 முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று சென்னை வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தொண்டர்கள் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்க பாலு, எம்.கிருஷ்ணசாமி, மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  பேசியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை  3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய பாஜக ஆட்சியில் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின்  நிலைப்பாடு. அதற்காக, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் வழக்கு தொடுக்கப்படுகிறது.

கர்நாடகாவில் இரு காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். மூன்றாவது  எம்.பி. பாஜகவில் இணைந்து விட்டார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான இரண்டு எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். உடனே அவர்கள் பாஜகவில் இணைந்து விட்டனர்.

பாஜக என்பது, கங்கை நதியைப் போல. குளித்தவுடன் அனைத்து பாவங்களும் நீங்கி விடும். ஒரு நாளும் அந்த கங்கை நதியில் குளிக்க மாட்டேன். நீதிக்கு, நீதிபதிக்கு தலை வணங்குவேன். அநீதிக்கு வளைய மாட்டேன்.

2016  நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த பிறகு நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.

டெல்லி காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 200. ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.7-க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை.

இதனைதான் இனி நான் பேசப் போகிறேன். அனைத்து காங்கிரஸ் காரர்களும் பேச வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி 3.5 சதவீதம் என்று பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இருந்தால் தொழில்கள் வளராது. வேலைவாய்ப்புகளும் உருவாகாது.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்து, அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை 800 முதலாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் பட்ஜெட்டில் துண்டு விழப்போகிறது.

இதனை ஈடுகட்ட, அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை 5-லிருந்து 8 சதவீதமாகவும், 8-லிருந்து 12 சதவீதமாகவும், 12-லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து ரூ.1 லட்சம் கோடி வரியாக எடுக்கப் போகிறார்கள். இந்திய மக்களுக்கு எதிராக இதைவிட பெரிய யுத்தத்தை யாரும் தொடங்க முடியாது.

நான் சிறையில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தி, குலாம்நபி ஆசாத்,  அகமது படேல்,  சசி தரூர் உள்ளிட்டோர் என்னைச் சந்தித்தனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த காங்கிரஸும் எனக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். காங்கிரஸ் என்ற மிகப்பெரிய இயக்கம் துணையாக இருக்கும்வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.