உள்ளாட்சி தேர்தலில் கண்ணாமூச்சி ஆட்டம்: மறுக்கப்படும் மூன்றாவது வாக்குரிமை!

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குடிமக்கள் அனைவருக்கும் மூன்று விதமான வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டை ஆள்பவர்கள், மாநிலத்தை ஆள்பவர்கள், உள்ளாட்சியை ஆள்பவர்கள் என மூன்று பிரதிநிதிகளை தேர்வு செய்ய, இந்த வாக்குரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்துவதால், இரண்டு வாக்குரிமைகளும் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு, மாநில தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் இருப்பதால், உள்ளாட்சி தேர்தல்கள் பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறுவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் உரிய முறையில் செயல்பட்டால்தான், தங்களுடைய தெரு மற்றும் ஊரின் அடிப்படை பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கூறி அதற்கு உடனடி தீர்வு காண முடியும்.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவதில், பல மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருகின்றன. இதனால், சாலைகள், நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை கழிவுகள் போன்ற அடிப்படை தீர்வு காண முடியாமல் போகிறது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் குரல்கள் தேசிய அளவில் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால், அவர்களே, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களில் பறிப்பதிலும், அவற்றுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி முடிக்காமலும் இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருகிறது. இதனால், மத்திய அரசிடம் இருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி 6 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு இன்னும் வழங்காமல் உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே, மத்திய அரசிடம் இருந்து அந்த நிதியை பெற முடியும். தற்போதுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல்கள், தமிழகத்தில் நடைபெறுமா? என்பதே சந்தேகமாக உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் தொகுதி மற்றும் வார்டு மறு வரையறைகள், இட ஒதுக்கீடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதை காரணம் காட்டி, திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

இடைப்பட்ட காலகட்டத்தில், அத்தகைய குறைபாடுகளை களைந்து, சட்ட விதிமுறைகளின்படி, தமிழக அரசு, வார்டு வரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றை சரி செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.

ஏற்கனவே, வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீட்டில் குளறுபடி இருக்கும் நிலையில், புதிதாக ஒன்பது புதிய மாவட்டங்களை பிரித்ததில், இந்த குளறுபடிகள் மேலும் அதிகரித்துள்ளது என்று திமுக கூறுகிறது.

இதற்கு மத்தியில்தான், கடந்த 2 ம் தேதி, நகர்புறங்கள் தவிர்த்து, தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் வரும் 27 மட்டும்  30 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தது திமுக. இந்த வழக்கில், புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில், நேற்று ஒரு சில மாற்றங்களுடன், வரும் வரும் 27 மட்டும்  30 ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்துள்ளது.

தீர்ப்பின் ஒரு பகுதியை மட்டுமே பின்பற்றிய தமிழக தேர்தல் ஆணையம், இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்டவிதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற மற்றொரு பகுதியை மறந்து விட்டது என்று கூறும் திமுக, மீண்டும் நீதி மன்றத்தின் கதவுகளை தட்டுவதை தவிர வேறு வழி இல்லை என்கிறது.

மேலோட்டமாக பார்த்தால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு திமுகவின் வழக்குகளே காரணம் என்றே தெரியும். ஆனால், திமுகவை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் என்பது சிலர் கருத்து.

உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படி செயல்படும் இடங்களில் மட்டுமே, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு கிடைக்கும்.

ஆனால், முக்கியமான சில சிக்கல்களுக்கு தீர்வு காணாமல், அரசு உள்ளாட்சி  தேர்தலை அறிவிப்பதும், அந்த சிக்கலை காரணம் காட்டி எதிர்கட்சிகள் நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்துவதுமே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினை.

இதன்மூலம், மக்களுக்கு தங்களை தாங்களே ஆளும், உள்ளாட்சி தேர்தலுக்கான மூன்றாவது வாக்குரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் என அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது.

இதற்கு, உள்ளாட்சி தேர்தல்களை நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று மூத்த அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர்.