திமுக எதிர்ப்பு: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி ரத்து!

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, ஒரு வருட இந்தி மற்றும் பிரெஞ்சு மொழி பயிற்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதை தொடங்கி வைத்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், 2014 ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட ஆணையின் அடிப்படையில்தான், பிற மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தி மொழி விருப்ப பாடம்தான் என்றும் கூறினார்.

எனினும், அந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில், போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்பட மாட்டாது என்றார்.

இந்த விவகாரம் அரசியலாக்கப் படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக மொழி ஒன்றும், இந்திய மொழி ஒன்றும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரெஞ்சு மொழி பயிற்சி வழக்கம் போல தொடரும். இந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தெலுங்கு மொழி கற்பிக்க பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.