பாலியல் குற்றவாளிகளால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

ஐதராபாத்தில் பாலியல் கொலை குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்த பரபரப்பு அடங்குவதற்குள், உன்னாவோவில், பாலியல் குற்றவாளிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் உன்னவோவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை போலீசார் ஏற்காமல் இழுத்தடித்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர், வழக்கை பதிவு செய்த போலீசார், கடந்த மார்ச் மாதம், சம்பந்தப்பட்ட, சிவம், சுபம் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெறும் ரேபரேலி நீதிமன்றத்திற்கு செல்வதற்காக விடியற்காலை நான்கு மணிக்கு, அந்தப்பெண், தமது வீட்டில் இருந்து, அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை வழிமறித்த, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர் மீது தாக்குதல் நடத்தி, மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி உள்ளனர்.

அந்த பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள, எரியும் நெருப்புடன் கொஞ்ச தூரம் ஓடி, அங்கிருந்த மக்களிடம் தன்னை காப்பாற்ற சொல்லி போராடி உள்ளார்.

உடலின் பெரும்பகுதி எரிந்த நிலையில், போலீசார் உதவியுடன், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அந்தப்பெண் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மருத்துவமனையில், மருத்துவர்களிடம் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், தான் வாழ வேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று அந்தப்பெண் மன்றாடி இருக்கிறார்.

மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், உத்திரபிரதேசம் மட்டுமன்றி, நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில நீதித்துறை அமைச்சர் ஆகியோர், இந்த சம்பவத்திற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். மிக விரைவில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

எனினும், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக மாறி வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்புகளும்  கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், சிவம், சுபம் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் நடந்துள்ள, உன்னாவோவில் மட்டும் கடந்த பதினொரு மாதங்களில் 86  பலாத்கார சம்பவங்களும், 185 பாலியல் வன்முறை வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அம்மாநிலத்தில், உன்னாவோவில்தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதால், உத்தரப் பிரதேசத்தின் ‘குற்றத் தலைநகரம்’ என்ற நிலைக்கு மாறியுள்ளது.

இதுவரை பதிவான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர்  கைது செய்யப்பட்டபோதும், கைதான வேகத்தில் பலரும் ஜாமீனில் வந்துள்ளனர்.

பாலியல் வழக்குகளைக் கையாள்வதில் போலீசார் காட்டும் மெத்தனமும், அரசியல் குறுக்கீடுகளுமே இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு முக்கிய கரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஐதராபாத் பாலியல் கொலை குற்றவாளிகளை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு, பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தாலும், சிலர், நீதிமன்றத்தில் முன்னிறுத்தியே குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர்.

ஆனால், உன்னோவாவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்தப்பெண்ணை தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர் குற்றவாளிகள்.

உயிரிழந்த பெண்ணின் தந்தையோ, ஐதராபாத் என்கவுண்டர் போன்ற தண்டனையே, தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி என்று கோரி இருக்கிறார்.