தமிழ் மக்களின் உணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும்: சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி!

தமிழ்நாட்டு மக்கள் காட்டும் எச்சரிக்கையை, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் என்றைக்கு காட்டுகிறார்களோ, அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சிதம்பரம் நேற்று மாலை சென்னை வந்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தமிழ் மக்களின் உணர்வுகள் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதே எனது ஆசை என்று பாஜகவை விமர்சித்தும் தமிழக மக்களை பாராட்டியும் பேசினார். அவர் மேலும் கூறியதாவது:-

மக்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய ஒரு பாசிச அரசு முறையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது. அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில், 75 லட்சம் மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவருடைய சுதந்திரம் மறுக்கப்பட்டால், அனைவருடைய சுதந்திரமும் மறுக்கப்படுகிறது என்று அர்த்தம்.

என்னுடைய மன உறுதியை குலைக்க வேண்டும் என்றுதான் சிறையில் அடைத்தார்கள். என்னுடைய மனஉறுதி ஒருநாளும் குறையாது.

இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பொருளாதார வளர்ச்சி 9  சதவிகிதம் வரை உயர்ந்தது. தற்போது,  4.5 சதவிகிதமாக சரிந்துள்ளது.

இந்தியாவை, வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லாத பாஜக, பள்ளத்தாக்கில் தள்ளிக்கொண்டு இருக்கிறது.

பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முடியுமா என்று எனக்கு தெரியவில்லை என்று உருக்கமாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.