உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி?: மாறுபட்ட அணுகுமுறையில் அதிமுக – திமுக!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று திமுக கொண்டாடுகிறது.

ஆனால், புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்ற தீர்ப்பு, தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட திமுகவுக்கு எதிரானது என்று அதிமுக சொல்கிறது.

உண்மையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, வரும் 27  மற்றும்   30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பாணையை, தமிழக தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், வார்டு மறு வரையரை, இடஒதுக்கீடு போன்ற விதிகளை உறுதி செய்து, தேர்தல் அறிவிக்க தற்போது வாய்ப்பு இல்லை. ஒரு வேளை அதற்கு முன்பாக, தேர்தல் அறிவிக்கப்பட்டால், மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் திமுக இருக்கிறது.

எனினும், ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், தமது கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களை அழைத்து, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அத்துடன், அதிமுக பொதுக்குழுவை கூட்டியும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளிடம் எப்படி நடந்து கொண்டு வெற்றியை பெறுவது? என்பது குறித்தும் அக்கட்சி ஆலோசனை நடத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே நடக்கும் தேர்தல், அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும். இது, திமுகவை சற்று கவலை அடைய செய்துள்ளது. அதே சமயம், அதை எதிர்கொள்ளும் வலிமையையும் அக்கட்சிக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

எப்படியும், ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அதிமுக இருந்தது. அப்படி தடை வரும் பட்சத்தில், அதை திமுக மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கலாம் என்பதே அதிமுகவின் திட்டம். இந்த திட்டத்திற்கு பாதி வெற்றிதான் கிடைத்துள்ளது.

அதேபோல், தற்போதுள்ள நிலையில், மறைமுக தேர்தல் என்பது அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்பதால், திமுகவுக்கும், இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை.

எனினும், குறைந்த பட்சம் நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்ற நிலையே தற்போது உள்ளது. இதில் அமையும் வெற்றி தோல்விகள், அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த தாக்கம் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்துவிட கூடாது என்பதே திமுகவின் விருப்பமாக உள்ளது. ஆனால், இந்த தேர்தலில் அடையும் வெற்றி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு, மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் என்பது அதிமுகவின் கணக்காக உள்ளது.

எப்படி இருந்தாலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என்பதால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே, அதை சந்திக்க தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கின்றன.