அரசியலுக்காக 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – கமல் சேர்ந்து நடிக்கிறார்களா? அதிர்வலைகளை உருவாக்கும் பின்னணி!

சினிமா என்பது, எப்போதுமே ஒரு தனிப்பட்ட உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கனவு தொழிற்ச்சாலை. இங்கு யார் எப்போது உச்சத்தை தொடுவார்கள், பாதாளத்தில் விழுவார்கள் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது.

நடிகர் வடிவேலு சொன்னதைப்போல, பயணிக்கும் இடமெல்லாம் கன்னி வெடிகள் காத்திருக்கும். அதையும் தாண்டி அறுபது வருடங்களாக, திரையில் தொடர்ந்து, முன்னணியில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரம் கமலஹாசன்.

அதேபோல், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து, திரையில் தோன்றி, நாற்பது வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

ஆரம்பகாலத்தில், இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி, வசூலை வாரிக் குவித்தன. ஆனால், இருவருக்கும் தனித்தனியே நின்று சாதிக்க வேண்டும் என்ற தாகம், அவர்களை தனித்தனியே பயணப்பட வைத்தது.

படங்களின் வெற்றி, வசூல், தங்களுக்கான இடங்களை தக்க வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றில், இருவருக்குமே பல மறைமுக போட்டிகள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில், இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

இன்று கமல், ரஜினி ஆகிய இருவருமே அறுபது வயதை கடந்து விட்டனர். ஆனாலும், திரையில் இவர்களுக்கான வயது கொஞ்சம் கூட குறையவில்லை.

விஜய், அஜித் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்கள், சினிமாவில் இவர்களின் இடத்தை பிடித்து விட்டனர் என்றாலும், செல்வாக்கில் இவர்கள் இன்னும் முதன்மையில்தான் இருக்கிறார்கள்.

திரையுலகத்தின் பரிணாமம் அப்படி இருக்க, இருவரின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பதில், கமலஹாசன், சோதனை முயற்சியாக மக்கள் நீதி மய்யத்தை களம் இறக்கி விட்டார்.

இந்த சோதனை முயற்சி, கமலுக்கு பெரிய அளவில் வெற்றியை  தரவில்லை என்றாலும், ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.

ஆனால், ரஜினியை பொறுத்தவரை, நான் எப்படி வருவேன்? எப்போது வருவேன்? என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரே தவிர, இன்னும் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை.

கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த வரையில், கமல் – ரஜினியின் அரசியல் பிரவேசம் பெரிய அளவில் பேசு பொருளாக இல்லை.

ஆனால், அவர்கள் மறைவுக்கு பின்னர் எழுந்த “வெற்றிடம்” என்ற சொல், கமலை களத்தில் இறக்கி விட்டது. ரஜினியை இறக்கிவிட எத்தனிக்கிறது.

தற்போது, திராவிட கட்சிகளுக்கு எதிரான மாற்று என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், கமலும் ரஜினியும் இணைந்து சிலவற்றை செய்ய வேண்டிய நிலையை, சிலர் உருவாக்கி வருகின்றனர்.

இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிலர் பேச, சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், திரையை கடந்து, அரசியலின் தொடக்கமாக, கடந்த நாற்பது வருடங்களாக தனித்தனியாக இயங்கி வந்த கமல் – ரஜினியை இணைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்க தயாராகின்றனர் சிலர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாநகரம் படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தீபாவளிக்கு வெளியான கைதி படத்தின் மூலம் தாம் ஒரு விறுவிறுப்பான வெற்றிப்பட இயக்குனர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

மற்ற இயக்குனர்களை போலவே, இவருக்கும் ரஜினி மற்றும் கமல் படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது.

ஆனால், கமலையும் ரஜினியையும் சேர்த்து ஒரு படத்தில் இயக்கும் வாய்ப்பே லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கப்போகிறது என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால், நாற்பது வருடங்களுக்கு பிறகு கமல்-ரஜினி ஆகிய இருவரையும் இணைத்து இயக்கிய பெருமை லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கும்.

அத்துடன், ஏற்கனவே அரசியல் களத்தில் புகுந்துள்ள கமல், இனி இறங்கப்போகும் ரஜினி, ஆகிய இருவருக்கும், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக உருவகப்படுத்த வேண்டிய கடமையும் இயக்குனருக்கு உள்ளது.

எனவே, ரஜினி – கமல் இணைத்து நடிக்கும் படத்தை திரையுலகம் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைவிட, சற்று அச்சம் கலந்த ஆர்வத்துடன் தமிழக அரசியல் உலகம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.