அரங்கம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு!

தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், தர்பார் படத்தில் இசை வெளியீட்டுக்காக, இந்த அரங்கை கொடுத்ததற்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

ரஜினியின் 167-வது படமாக உருவாகும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  அனிருத்  இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் முருகதாஸ்,  நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவரின் சாயல் ரஜினிக்கு இருக்காது. ஆனால் ரஜினிகாந்தின் சாயல் ஹிந்தி, தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் உள்ளது என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது,  ரஜினியே ஒரு அதிசயம். அவரே ஒரு அற்புதம். ரஜினிகாந்த் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்;. ஆனால் பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்; சூப்பர் ஸ்டார் என்பதே ரஜினிகாந்த் தான்.

இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அவர் நிச்சயமாக பணம் சம்பாதிக்க வரவில்லை. அரசியலுக்கு ஏன் அவர் வருகிறார் என்று அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

இறுதியாக பேசிய ரஜினிகாந்த், “ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது. தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அரங்கை இசை வெளியீட்டிற்கு கொடுத்ததற்கு நன்றி.

வரும் டிசம்பர் 12 எனது பிறந்த நாள். எனக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது. நான் எனது 70வது வயதில் நுழைகிறேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். இது ஆடியோ விழா அல்ல. எனது பிறந்த நாள் விழாவாக நினைக்கிறேன்.

எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துகள் அதிகம் பரவுகிறது. அதனால் நாம் அனைவரும் அன்பைப் பரப்பி, நிம்மதியாக வாழ்வோம். அன்புதான் இப்போது தேவை என்று தெரிவித்தார்.