ப.சிதம்பரம் – சுப்ரமணியசாமி கொடுக்கும் நெருக்கடி: சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக!

தமிழகம் மட்டும் பாஜகவுக்கு தலைவலி அல்ல. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுப்ரமணியசாமியும் கூட தலைவலிதான்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை, புள்ளி விவரங்களுடன் விமர்சிப்பதில் ப.சிதம்பரத்திற்கு நிகராக யாரும் இருக்க முடியாது.

சிதம்பரத்தை பொறுத்தவரை, அவர் எதிர்கட்சியான காங்கிரசை சேர்ந்தவர். அவர் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சிப்பதில் பாஜகவுக்கு வருத்தம் இருக்கப் போவதில்லை.

ஆனால், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிசாமியின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது? அவரை எப்படி கட்டுப்படுத்துவது  என்று தெரியாமல் தவிக்கிறது பாஜக.

ஐ.என்.எக்ஸ். மீடியா,106 நாள் சிறைவாசத்துக்குப் பின், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, ப.சிதம்பரம், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

மன்மோகன்சிங்கை, பாஜக விமர்சித்த அதே வார்த்தைகளை பயன்படுத்திய சிதமரம். பொருளாதார விவகாரத்தில், தற்போதைய  பிரதமர் மவுனம் காக்கிறார். மத்திய அரசு, பொருளாதாரத்தில் திறமையற்ற மேலாளராக மாறிவிட்டது என்றார்.

மேலும், தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு சுழற்சி என்று அரசு கூறுகிறது. நல்ல வேளை, அதை ஒரு சீசன் என்று அவர்கள் சொல்லாமல் இருப்பதற்கு, கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நையாண்டியாக  கூறினார்.

கட்டமைப்பு ரீதியான சிக்கல்களை தீர்க்கும் தீர்வுகளோ, சீர்திருத்தங்களோ அரசிடம் இல்லை. எனவே, இந்த அரசால் பொருளாதார சிக்கலை தீர்க்க முடியாது.

காங்கிரசும், வேறு சில கட்சிகளும்தான் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கான சீர்திருத்தங்களை தரும் என்று நான் நம்புகிறேன். அதற்கு, சில காலம் காத்திருக்க வேண்டும் என்று பாஜகவின் இயலாமையை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் சிதம்பரம்.

சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் போன்ற மத்திய அமைச்சர்கள், ஏதாவது ஒரு வழியில் சமாளித்து, பதில் சொல்லி வருகின்றனர்.

ஆனால், பாஜகவை சேர்ந்த சுப்ரமணிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் பாஜகவினர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியவில்லை என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டி பேசி வருகிறார் சுப்ரமணியசாமி.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் எழுதிய ‘ரீசெட்’ என்ற பொருளாதார நூல் வெளியானது. அந்த நூல் பற்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாடி வரும் சுப்ரமணியசாமி, பாஜகவின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்த உண்மையான தகவல்கள், பிரதமர் மோடிக்கு சென்று அடைவதில்லை, அவரை சந்தித்தே மூன்றரை ஆண்டுகள் ஆகிறது என்கிறார் அவர்.

சுப்ரமணிசாமியின் கருத்துக்கள் பாஜகவினரை கடுமையாக முகம் சுளிக்க வைக்கிறது. ஆனால் அவரை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அவரை எப்படி சாந்தப்படுத்துவது என்று பாஜகவினர் யோசித்து வருகின்றனர்.

இவ்வாறு, மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவுக்கு ப.சிதம்பரம், சுப்ரமணியசாமி ஆகிய இருவருமே தலைவலியாக மாறி கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமே தலைவலியாக இருந்த பாஜகவுக்கு, தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம், சுப்ரமணியசாமி ஆகிய இருவரும் தற்போது கூடுதல் தலைவலியாக மாறிவிட்டனர் என்று கூறுகிறது டெல்லி வட்டாரம்.