9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குழப்பங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவை தவிர்த்த உள்ளாட்சி மன்ற தேர்தல்கள், வரும் 27 மற்றும்  30 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனாலும், தொகுதி மற்றும் வார்டு வரையறை உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் குழப்பம் போன்றவற்றை காரணம் காட்டி, திமுக மற்றும் சில தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி , கபில் சிபல், வில்சன் ஆகியோர் ஆஜராயினர். அரசுத் தரப்பில் முகுல் ரோஹ்தகி ஆஜரானார்.

மறுவரையறை செய்யாமல் தேர்தலை அறிவித்துள்ளதன் மூலம், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யாததால் குழப்பம் ஏற்படும் என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, தமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு என்ற அனைத்துப் பணிகளும் 2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்து விட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தற்போதைய நிலையில் லேட்டஸ்ட் சென்சஸ் அடிப்படையில் மறுவரையறை நடத்தப்பட்டுவிட்டது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘புதிய மாவட்டம் பிரிக்கும்போது அனைத்து எல்லையும் மாறும். அப்படி இருக்கையில் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை செய்து விட்டோம் என்று எப்படிக் கூற முடியும் என்றனர். மேலும்,  தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும் என்றும் கூறினார்.

இதையடுத்து, ‘9 புதிய மாவட்டங்களின் மறுவரையறைக்காக ஏன் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்? வேண்டுமெனில் 9 புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வையுங்கள் என்று முகுல் ரோஹத்கி தெரிவித்தார்

அதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர்கள்,  தடை விதித்தால் மொத்தமாகத் தேர்தலுக்குத் தடை விதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்  என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”9 மாவட்டங்களின் தேர்தலைத் தள்ளிவைக்க முடியுமா? என்று தேர்தல் ஆணையத் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில், ”9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார்’ என்று பதிலளிக்கப்பட்டது.

ஆனால், திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன்,  அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும். தனித்தனியாகப் பிரித்து நடத்தக்கூடாது. ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர். ஆனால் நேற்று மதியம் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து  காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதால், அதுவே தீர்ப்பாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.