புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் அனுமதி!

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில், நகர உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்  தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, அமித் ஆனந்த் திவாரி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானாராயினர். மற்ற மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வக்கீல் எம்.பி.பார்த்திபன் ஆகியோர் ஆஜராயினர்.

ஒரு மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கும்போது அனைத்து எல்லையும் மாறும். அப்படி இருக்கையில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை செய்து முடித்துவிட்டோம் என்று எப்படி கூற முடியும்? தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப் போட முடியும் என நீதிபதிகள் கூறினர்.

ஒன்பது மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நினைத்தால், அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை ஒத்திவையுங்கள் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்துவது பற்றி  நேற்று பிற்பகல் 2 மணிக்குள் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணை தொடங்கிய போது தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 9 மாவட்டங்களில் புதிதாக தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடைந்த பிறகு அந்த மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும்.

இந்த 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டகளில் தேர்தல் நடத்துவது குறித்த புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்பட்டு இருந்தது.

இதை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள் இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து,  உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம். விடுபட்ட 9 மாவட்டங்களில்,  4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும்.  மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.